அரசுப் பேருந்துகளில் தொடரும் சில்லறைப் பிரச்னை - என்னதான் தீர்வு.
பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒருமுறையாவது அரசு பேருந்தில் பயணித்திருப்பார்கள். அப்படி பயணக்கும் போது பயணிச்சீட்டு வாங்க கண்டிப்பாக சில்லறையை தேடி இருப்பார்கள். சென்னையில் ஆயிரக்கணக்கான மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சராசரியாக ஒரு நாளைக்கு 60 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது சென்னையின் பாதி மக்கள் தொகையாகும். வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்பவர்களும் மாநகரப் பேருந்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
இவ்வாறு கூட்டமான பேருந்துகளில் செல்லும் மக்கள் பயணச்சீட்டு பெறுவதை கடினமாக எண்ணுகின்றனர். அந்த கூட்டத்திலும் அடித்து பிடித்து பயணச்சீட்டை பெற்றால் அதற்கு சில்லறை கேட்டு சில நடத்துநர்கள் கடிந்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சில பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி பேருந்து பயணத்தையே வெறுத்து விடுகின்றனர். மாநகரப் பேருந்தில் சில்லறையால் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. அதில் சில வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பு வரை சென்று விடுகின்றன.
சமீபத்தில் கூட சில்லறை இல்லாததால் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட கமலக்கண்ணன் என்ற பயணி வன்முறையை கையில் எடுத்தார். அவர் வீடு செல்வதற்காக மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்ததுள்ளது. சில்லறை இல்லாததால் பயணச்சீட்டு கொடுக்க மறுத்த நடத்துநர், அவரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டார். அடுத்தடுத்து வந்த பேருந்துகளிலும் சில்லறை பிரச்சனை காரணமாக அவர் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி ஆட்டோவில் செல்லும் மனநிலைக்கு அவர் வந்துள்ளார். ஆட்டோ தற்செயலாக சிக்னலில் நின்றபோது அவரை இறக்கிவிட்டு சென்ற பேருந்தை கண்டு கோபமடைந்திருக்கிறார். உடனே ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர், அருகில் இருந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்தார். இதேபோன்று கடந்த மாதமும் சில்லரை இல்லாததால் ஒரு பெண்ணை தகாத வார்த்தைகளால் நடத்துநர் திட்டிய சம்பவம் அறங்கேறியது.
இவ்வாறு பேருந்தில் சில்லறை காரணமாக பல பிரச்சனைகள் வருவது தொடர்கதையாக இருக்கின்றன. இதற்கு சரியான தீர்வு இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சனை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிகழ்வதில்லை. ஏனென்றால் சிங்கப்பூர் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் சரியான சில்லறை இல்லாத போது ‘ஈஸ் லிங்க்’ என்ற மதிப்பு அட்டை அல்லது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பயணக்கட்டணத்தை செலுத்தும் வழியை பின்பற்றுகின்றனர்.
நம் நாட்டில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் ரயில்துறையில் கூட டிக்கெட் எடுக்க யூடிஎஸ் செயலியை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினர். இன்று இந்த செயலி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மகவும் உபயோகமாக இருந்து வருகின்றது. ஏன் இது போன்ற ஒரு செயலியை மாநகரப் பேருந்துகளுக்கும் அறிமுகப்படுத்த கூடாது ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது போன்ற செயலி இருந்தால் எப்படி இருக்கும் என்று நடத்துனரிடம் கேட்டபோது, “அதுவும் நல்லாதா இருக்கும், எப்படி டிக்கெட் எடுத்தாலும் அது நிர்வாகத்துக்கு தான் சேரப்போகுது. தினமும் டிக்கெட் எடுக்குறதுக்கு பதிலா ஒரு மாசத்துக்கு சேத்து டிப்போல 1000 ரூபாய் கொடுத்து பாஸ் வங்கிக்கிறாங்க. அதேப்போல் போன்ல டிக்கெட் எடுத்தாலும் அது நிர்வாகத்துக்கு தான் போய் சேர போகுது. அப்படி ஏதாச்சும் போன்ல பஸ் டிக்கெட் எடுக்குற மாதிரி வழி இருந்தா மக்களுக்கும் சிக்கல் இருக்காது. எங்க வேலயும் சுலபமாய் ஆகிவிடும்” என்று அவர் கூறினார்.
இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது, “ரயில் டிக்கெட்டை மொபைலிலேயே எடுக்கின்றது போல், பேருந்துக்கும் இருந்தா நன்றாகத்தான் இருக்கும் ஏன் என்றால், இப்ப எல்லாமே டிஜிட்டலா மாறிகிட்டு இருக்கு. நான் தினமும் பேருந்தில் செல்லும் போது, எனக்கும் நிறைய முறை சில்லறை பிரச்னை வந்திருக்கு. அந்த நேரத்தில் எல்லாம் இப்படி ஒரு ஆப் இருந்தா நன்றாக இருக்கும் என்று யோசிச்சு இருக்கேன்”என்று கூறினர்.
தொழில்நுட்பம் வானளவு வளர்ந்துள்ள இந்த அவசர உலகத்தில், லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பேருந்து பயணத்திற்கு புதியதொரு திட்டத்தை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல. அதற்காக அரசு சற்று கவனம் செலுத்தினால் எளிதில் இந்த சில்லறை பிரச்னையை சிதறடித்துவிடலாம்.