”மூச்சு விட கூட மோடி அரசிடன் டோக்கன் வாங்க வேண்டுமா?” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்!
ஸ்மார்ட் வாட்ச் போன்ற அதிநவீன சாதனங்கள் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நடக்கும் நிகழ்வுகள் வெளியே கசிவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கேமரா பேனா ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தசூழலில் தான், எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது! அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை.. நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது!
நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்! நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா? மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்!
இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!” எனத் தெரிவித்துள்ளார்.

