“பிரதமரை வரவேற்ற விதம்: திமுகவின் நிலைப்பாட்டை சந்தேகிக்க வேண்டியதில்லை” - திருமாவளவன்
சென்னை இராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன். அவர் பேசிய போது,
“தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதவை நிராகரிக்க முடியாது மற்றும் காலம் தாழ்த்த முடியாது என்பதால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

அப்படிப்பட்ட ஆளுநரின் அனுகுமுறைகளை கண்டித்து, வருகின்ற 12 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழக தலைவரின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். இந்திய அரசு, ஆளுநர் ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
பிரதமரை வரவேற்கும் முறையில், ஒரு ஆளுங்கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி சட்ட வரையறைகளின்படியே திமுக செயல்பட்டது. அதேநேரத்தில் ஆளுநர் மற்றும் பிரதமரின் ஜனநாயக விரோத போக்கை மிக வெளிப்படையாகவும் வரம்பு மீறாமலும் கண்டிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தமிழக முதல்வர் தனது பிறந்தநாளில் பாஜகவை வீழ்த்துவதே இலட்சியம் என உறுதிபட கூறியிருக்கிறார்.

எனவே பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவி விட்டது என சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை.
திருமாவளவன், விசிக தலைவர்
பல்வீர் சிங் விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முறைப்படி, நீதிபடி சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்