சிஏஏ-க்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் - சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு
மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள சகாயமாதா ஆலய வளாகத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் சார்பில் இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு கூடுகை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன், மற்றும் தமிழ்நாடு ஆயர்பேரவை தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி மற்றும் அனைத்து கிறிஸ்துவ அமைப்பினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், "குடியுரிமைக்கு எதிரான போராட்டம் பரவலாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஒரு வாரமாக கொடுமைகள் நடைபெற்று வருகிறது. எங்களுக்கு கலவரத்தை பற்றி அச்சம் இல்லை. கலவரக்காரர்களை கண்டே அச்சமடைகிறோம். எல்லா மாவட்டங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எங்களைப் போன்றவர்கள் மீது தமிழகத்தின் எல்லா காவல்நிலையங்களிலும் வழக்கு போடப்பட்டுள்ளது.
நாங்கள் பொது அமைதியை குலைக்கவில்லை. அமைதியை குலைக்கும் முழுநேர தொழிலை டெல்லியில் இருவர் செய்து வருகின்றனர். எத்தனை ஆயிரம் வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே தான் இருப்போம்.
குடியுரிமைக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் தமிழக காவல்துறை அனுமதி கொடுப்பதோடு, வழக்கும் போடுகிறது. குடியுரிமைத் திருத்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருப்பதை போல தமிழக அரசு நடிக்கிறது. டெல்லியில் நடப்பது கலவரமல்ல நடப்பது தாக்குதல். ஊடகங்கள் கலவரம் என சொல்லாமல் தாக்குதல் என்பதை சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் பேசுவதை தன் முழுநேர தொழிலாக செய்து கொண்டுள்ளார். போராடுபவர்களை துப்பாக்கியால் சுட வேண்டும் என பேசிய பாஜகவின் அனுராக் தாக்கூர் தீவிரவாதியா? நாங்கள் தீவிரவாதியா?
ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே புனிதநூல் உள்ளது போல, எல்லாருக்குமான புனித நூலாக அரசியல் சாசன சட்டம் உள்ளது. நம் ஒற்றுமை என்பது நம் ஆன்மிகம் மற்றும் அரசியல் மரபில் உள்ளது. தமிழகத்தின் அரசியல் ஆன்மிக பண்பாட்டு மரபில், தமிழர்கள் தனித்து நிற்பார்கள்.
குடியுரிமைக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவை பரபரப்பில் வைக்கப்போகிற சட்டம் குடியுரிமை சட்டம். மதவெறி கும்பலிடம் இந்தியா மாட்டிக்கொண்டு முழிக்கிறது. அதை நிச்சயம் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம்" என பேசினார்.