”ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் கார் பரிசளித்தது மகிழ்ச்சி” - எம்பி கனிமொழி சொன்ன கருத்து

கோவை தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்க விவகாரத்தில் மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், கமலஹாசன் கார் வழங்கி இருப்பது மகிழ்ச்சி, நல்ல விஷயம் வரவேற்புக்குரியது என எம்பி கனிமொழி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதால் பிரபலமானார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வந்தனர்.

ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டும் வகையில் அவரது பணியாற்றி வந்த பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணித்து அவரை நேரில் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கும் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவராகவே வேலையில் இருந்து நின்றுவிட்டதாக பேருந்து உரிமையாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இதனை அடுத்து திமுக எம்பி கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியிருந்தார்.

kamalhassan
kamalhassanpt desk

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். சுயமாக தொழில் செய்வதற்கு ஊக்குமளிக்கும் வகையில் இந்த செயல்பாடு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெல்லையில் இயற்கை வண்ண ஓவிய பயிலரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் ஓட்டுநர் பணியை இழந்த ஷர்மிளாவுக்கு மாற்று வேலை தயார் செய்திருந்தோம். அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியதால் சிறிது நாள் கழித்து தெரிவிக்க காத்திருந்தோம். ஆனால், அந்த இடைவெளியில் கமலஹாசன் கார் வாங்கிக் கொடுத்துள்ளார். மகிழ்ச்சிதான், இது நல்ல விஷயம். வரவேற்கக் கூடியது தான் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com