
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தூத்துக்குடி, அண்ணாநகரில் நேற்று இரவு நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு நாளும் புதிய, புதிய திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி. மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரண உதவியை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது இந்த அரசு. நெய்தல் நிலங்களை பாதுகாக்க 2,000 கோடி ரூபாயை இந்த ஆட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. தூத்துக்குடியில், குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கூறுவது போல் திராவிட கருத்தியல் காலாவதியானது அல்ல, அவரது பதவிதான் காலாவதியானது. பிரிட்டிஷ் அரசின் மிச்சம், எச்சம் தான் ஆளுநர் பதவி. அதை தூக்கிப் போட வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டு செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் என அனைத்தையும் பகிர்ந்து கொடுத்தது திராவிட ஆட்சி. ‘ஆளுநர் பதவி ஒரு அலங்காரப் பதவி, அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம்’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். அவசியம் இல்லாத அலங்காரம் களையப்படும். தூக்கி எறியப்படும்” என்று காட்டமாக பேசினார்.