
கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2023-ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பெருமையாக பேசினார். அதற்கு பதிலளிக்க அங்கு என்னை அனுமதிக்கவில்லை.
53 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழகம் 50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அவர். அப்போது அவரிடம், “நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்களுக்குச் சொந்தமான இடத்தை சீல் வைத்துள்ளனரே” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், “அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன். சட்டரீதியாக எதிர்கொள்வேன். அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பதுதான்” என்றார்.