
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தொழிலாளர்கள் பேருந்து கட்டண உயர்வால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழக அரசு பேருந்துகள் பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு பல்வேறு தரப்பினரை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், கட்டண உயர்வால் பாதிப்பின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏலக்காய் தோட்டங்களில் துவங்கி, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் பேருந்துகளை நம்பியுள்ளனர். தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், போடி தேவாரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்து வாழ்வாதாரம் தேடும் இவர்கள் பேருந்து கட்டண உயர்வால் பெரிதும் பாதிப்படைந்ததுள்ளனர்.
அரசு உத்தரவுப்படி, குமுளியில் இருந்து கம்பம் செல்லும் நகர பேருந்தில் 10 ரூபாயில் இருந்து 16 ரூபாயாக கட்டணம் அதிகரித்திருக்கிறது. நகர பேருந்தின் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 9 ரூபாயாகியுள்ளது. குமுளியில் இருந்து கம்பத்திற்கு சாதாரண பேருந்துகளில் 15 ரூபாயாக இருந்த கட்டணம் 21 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 7 ரூபாயாக இருந்த கட்டணம் 13 ரூபாயகவும் உயர்ந்திருக்கிறது. குமுளியில் இருந்து தேனிக்கு 35 ரூபாயாக இருந்தது 52 ரூபாயகவும், மதுரைக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 115 ரூபாயாகவும், திண்டுக்கல்லுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 120 ரூபாயாகவும், திருச்சிக்கு 105 ரூபாயாக இருந்த கட்டணம் 205 ரூபாயாகவும், சிவகாசிக்கு 110 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும், திருச்சிக்கு 140 ரூபாயில் இருந்து 205 ரூபாயாகவும், பழனிக்கு 105 ரூபாயில் இருந்து 145 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
குமுளியில் இருந்து நெடுந்தொலைவுகளான திருச்செந்தூருக்கு 195 ரூபாயில் இருந்து 278 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 160 ரூபாயில் இருந்து 232 ரூபாயாகவும், நாகர்கோவிலிற்கு 220 ரூபாயில் இருந்து 292 ரூபாயாகவும் கட்டணம் உயர்ந்திருக்கிறது. ஆனால் கேரளாவிற்குள் இருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகள் வழக்கமான பழைய கட்டணத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.