24 ஆண்டுகளாக மீன் சுத்தம் செய்யும் வேலை; போராடி மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்கவைத்த தாய்
கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு, உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கறியை கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார் ரமணி.
மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும். இதற்காக இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார் இவர்.
காலகட்ட இவரது மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது. இதனால் பத்தாவதுக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போதுவரை வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு மாதத்தில் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜயலட்சுமிக்கு, மருத்துவம் படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்புக்கு பின்னர் மதிப்பெண், செலவு போன்றவற்றை கருத்தில்கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்றுள்ளார் ரமணி. அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மகளை மருத்துவம் படிக்க வைத்துள்ளார். அதன் விளைவாக தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ளார் மகள் விஜயலட்சுமி. இருப்பினும் தொடர்ந்து அவர் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற, அங்கீகாரத்துக்கான தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விஜயலட்சுமி.
இன்னமும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார். கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு எங்கெங்கோ பறந்து திரிந்து உணவை எடுத்து வந்து ஊட்டி வளர்க்கும் தாய்ப் பறவை போல, சொத்துக்களை இழந்தாலும், தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல்வத்தை முழுமையாக கொடுத்த திருப்தியுடன் இருக்கிறார் தாய் ரமணி
இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு தன் கணவர் இறந்ததால் இளமைப் பருவத்தில் பல போராட்டங்களை கடந்து தன் மகளை மருத்துவ படிப்புக்காக மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி சுத்தம் செய்து தரும் கூலித்தொழில் இன்னமும் செய்து வருகிறார். அவர் பல கட்டப் போராட்டங்களை சந்திக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கு ஆதரவாக தனது வீட்டில் வளர்க்கும் வாயிலாக ஜீவனாக மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அவர்கள்தான் அவர் குடும்பத்திற்கு பாதுகாவலன் என்று சொல்லி, அந்த நாய்களை தெய்வமாக மதித்து தினமும் காலை வேலைக்கு செல்லும்போது தனது நாய்களை தொட்டு வணங்கிய பின்பு வேலைக்கு செல்கிறார்.
- மா.ராஜாராம்