இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி: ஒரு குழந்தை உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
திருவாரூர் மாவட்டம் பொன்னிரை அருகேயுள்ள இளவரசநல்லூரைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு மாரியம்மாள் என்ற பெண்மணியுடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து இரண்டாவதாக தேவி என்ற பெண்மணியையும் அறிவழகன் திருமணம் செய்துள்ளார். அவருக்கு 3 வயதில் திரிஷிகா, திரிஷனா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுமே ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது மனைவியான தேவி நேற்று தனது அறையில் இரட்டை பெண் குழந்தைகளையும் தூக்கில் மாட்டிவிட்டு தானும் தூக்குபோட்டுக்கொண்டார். அலறல் சப்தம் கேட்டு வந்த மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் மூவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் திரிஷிகா திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் இறந்துவிட்டார். தேவியும் திரிஷனாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.