குழந்தையின் வலது கை அகற்றம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?-தாய் கூறும் பகீர் தகவல்

“என் குழந்தைக்கு நடந்தது, நாளைக்கு எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது”
குழந்தையின் பெற்றோர்
குழந்தையின் பெற்றோர்PT Desk

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடும் போது ஏற்பட்ட குறைபாட்டால், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும் இதனால் கையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனிடம் கேட்ட போது, “32 வாரங்கள் மட்டுமே ஆன குறை பிரசவத்தில் பிறந்த 1.5 கிலோ கிராம் எடை மட்டுமே கொண்டது அந்தக் குழந்தை. குறைமாத குழந்தைகளுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளான தலையில் இரத்தக் கசிவு , மூளை வளர்ச்சி இன்மை, இதயத்தில் ஓட்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இக்குழந்தைக்கும் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய தலைக்கும் வயிறுக்கும் ஸ்டென்ட் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறோம்.

இந்த நிலையில் தான் தற்போது குழந்தையின் கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கையை அகற்றினால் மட்டுமே குழந்தையை காக்க முடியும் என்பதால் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். அதே வேளையில் சிகிச்சையின் போது ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொது மருத்துவத்துறை உள்ளிட்ட 3 துறை மருத்துவர்கள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். விசாரணை அறிக்கைக்கு பிறகே தவறு நடந்ததா என கூற முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோர் எழுப்பிய புகார் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு, "32 வாரங்களில் பிறந்த குழந்தை என்பதால் அக்குழந்தைக்கு ஏற்கெனவே பாதிப்புகள் உள்ளன. இப்போது தகவல்களை கேட்ட உடன், கவனக்குறைவால் தவறு ஏற்பட்டதா என கண்டறிய மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. யாரும் வேண்டும் என்று செய்ய மாட்டார்கள். தவறு ஏதும் இருந்தால் கவனக்குறைவால் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கும் சேர்த்து பொறுப்பெற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் அழுகிய வலது கை இன்று அகற்றப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தாய் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில், “என் குழந்தைக்கு நடந்தது, நாளைக்கு எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது. குழந்தைக்கு நான்காவது நாள் சிகிச்சையின்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. நாங்கள் முறையிட்டும் செவிலியர் அலட்சியம் காட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜீவ்காந்தி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதில், “குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அளிக்கும் அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com