”நான் சொன்னதுதான் ரிப்போர்ட்ல இருக்கு; ஏன் பொய் சொன்னாங்க”-கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் கேள்வி!
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையின் கை அழுகி, அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மருத்துவக் குழுவின் அறிக்கை தொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குழந்தையின் தாய் பேசுகையில், “மருத்துவ அறிக்கையை ஏற்கவில்லை. மருத்துவர்களை மட்டுமே விசாரித்துள்ளனர். ஆனால் சிகிச்சைபோது இருந்த அனைவரையும் விசாரிக்கவில்லை. 29 ஆம் தேதி மருத்துவர் குழந்தையின் நிறம் மாறியதை மருத்துவர் சோதித்தார் என அறிக்கையில் கூறி இருக்கின்றனர். ஏன் அப்போது மேல் நடவடிக்கை உடனடியாக எடுக்கவில்லை.
மருத்துவர்கள், செவிலியர்களால் தான் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஐ.சி.யூ.வில் இருந்தபோது குழந்தை நன்றாக இருப்பதாக ஐ.சி.யூ. மருத்துவர் தெரிவித்து இருந்தார். 2 மணி நேரத்தில் தான் குழந்தையின் கை அழுகியதாக அறிக்கையில் கூறி இருப்பது ஏற்க முடியாது. அரசு பொதுமக்களுக்கு துணையாக இல்லை என்பது தெரிகிறது. 29 ஆம் தேதி ஜூன் மாதம் குழந்தையின் நிறம் மாறி இருந்தது. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”