பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்

பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்
பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்

சேலம் அருகே தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமி வழக்கைபோல நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண், தானும் கிணற்றில் குதித்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூர் பகுதியில் கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று காவல்துறை உதவியுடன் அப்பெண்ணை மீட்டனர். அப்போது மீட்கப்பட்டவர், பிரியங்கா காந்தி என்பது தெரியவந்தது. பிரியங்கா காந்தி உயிரோடு மீட்கப்பட்டாலும் அவரது நான்கு வயது குழந்தை சிவானி உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சியா என போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக முகமூடி அணிந்த நபர் தன்னையும் தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளியதாக கூறினார் பிரியங்கா காந்தி. ஆனால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வழிப்பறி செய்வதற்கான எந்தத் தடயமும் அடையாளமும் இல்லை. மேலும் அந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பது மற்றொரு தகவல்.

இப்படி பல்வேறு காரணங்கள் காவல்துறையினருக்கு பிரியங்கா காந்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிரியங்கா காந்தி இடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கணவர் சங்கர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், பெண் குழந்தையோடு தனிமையில் வசித்து வந்த பிரியங்கா காந்திக்கு பல ஆண்களோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது தன் மனைவியிடம் பேசுவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சங்கர், குழந்தையிடம் பேசும்போது அம்மா பிற ஆண்களிடம் பேசுவதை யதாரத்தமாக அக்குழந்தை கூறியதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா காந்தி குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதும், பின்னர் இரவு முழுவதும் கிணற்றின் ஓரம் காத்திருந்து அதிகாலை மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் தானும் கிணற்றில் இறங்கி தத்தளிப்பது போன்று நடித்தது தெரியவந்துள்ளது. செய்த குற்றத்தை மறைக்க கொள்ளையர்களால் கிணற்றில் தள்ளப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து காவல்துறையினர் பிரியங்கா காந்தியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தைகளையே கொடூரமாக கொலை செய்த சென்னை அபிராமியை தொடர்ந்து மீண்டும் சேலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com