காதலுக்கு எதிர்ப்பு - பெற்ற மகளை கொளுத்தி தற்கொலைக்கு முயன்ற தாய்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், பெற்ற மகளை கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி போலீஸ் சரகம் வாழ்மங்கலம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 17 வயது மகள் ஜனனி என்பவரும் 16 வயது மகன் அருண் என்பவரும் உள்ளனர்.
ஜனனி அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனை ஜனனியின் பெற்றோர்கள் இரண்டு முறை கண்டித்துள்ளனர். ஆனால் ஜனனி மீண்டும் அந்த வாலிபரை காதலித்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவரும் அங்குள்ள வயல் வெளியில் சந்தித்ததை தாயார் பார்த்து கண்டித்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து நேற்று இரவு ஜனனியின் தந்தை கண்ணன் வெளியில் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது மகன் அருண் வீட்டின் வெளியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஜனனியின் தாயார் உமா மகேஸ்வரியும், மகள் ஜனனியும் வீட்டுக்குள் படுத்திருந்தனர். அப்போது காதல் விவகாரம் குறித்து ஜனனியை தாயார் உமாமகேஸ்வரி கண்டித்துள்ளார்.
இதனை ஜனனி ஏற்கவில்லை என்பதால் உமாமகேஸ்வரி வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மகள் ஜனனி மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் தீப்பற்றி எரிந்து விழுந்தனர்.
இவர்களின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து தீக்காயமடைந்த உமாமகேஸ்வரி மற்றும் ஜனனி ஆகிய இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.