பெற்ற பிள்ளைகளையே கொல்ல என்ன காரணம் ? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!
சென்னை அருகே குன்றத்தூரில் தமது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் பெண் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. காதல் திருமண தம்பதியான இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு விஜய் பணிக்குச் சென்றுவிட்டார். வேலைப்பளு காரணமாக அன்றிரவு விஜய்யால் வீட்டுக்கு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை விஜய் வீட்டுக்கு வந்து பார்த்த போது அபிராமியை காணவில்லை. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்த விஜய், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. குன்றத்தூரில் பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கள் தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றதாக தெரிகிறது. இதற்கு அபிராமியை சுந்தரம் தூண்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 30ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் பெண் குழந்தை கார்னிகா இறந்துவிட்ட நிலையில் கணவருக்கும் மகன் அஜய்க்கும் எதுவும் ஆகவில்லை என தெரிகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என திகைத்துப்போயிருந்தார் அபிராமி. நடந்தது எதுவும் தெரியாத விஜய் காலையில் பணிக்கு செல்லும் முன் வழக்கம் போல் முன் மகளுக்கு ஆசையாக முத்தம் கொடுத்துவிட்டு செல்வதற்காக, படுக்கையறைக்குள் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிராமி அசதியில் தூங்கும் குழந்தையை எழுப்ப வேண்டாம் என கணவரை தடுத்து அப்படியே வேலைக்கு அனுப்பிவிட்டார். இதையடுத்து மகன் அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்கமருந்து கலந்துகொடுத்து அவன் தூங்கிய பின் கழுத்தை நெறித்துக்கொன்றுள்ளார்.
அதன்பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நகையை விற்று பணம் பெற்றுக்கொண்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் அபிராமி இருசக்கர வாகனத்தில் வருவது பதிவாகி உள்ளது. குழந்தைகளைக் கொன்ற புகாரில் சிக்கியுள்ள அபிராமியின் வண்டியில் உயிரிழந்த பிஞ்சுகளின் பெயர் எழுதப்பட்டுள்ளது தான் நகைமுரண். வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் அபிராமி திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் அபிராமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரையும், அபிராமியின் சகோதரரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவில் சென்ற காவல்துறையினர், சுந்தரத்தை விட்டு அபிராமியிடம் பேச வைத்தனர். காவல்துறையினர் யோசனைப்படி தன்னைக் காண நாகர்கோவில் வரும்படி அபிராமியை அழைத்தார் சுந்தரம். அதனை நம்பி நாகர்கோவில் வந்த அபிராமி கைது செய்யப்பட்டார். பின்னர் சுந்தரமும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறந்த இரு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் விஜயின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெற்ற குழந்தைகளையே கொலை செய்யும் அளவுக்கு துணிவதற்கு, தவறை துணிந்து செய்யும் மனநிலை மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊடகங்களின் வளர்ச்சியும் ஒரு காரணம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதுகுறித்து மனநல மருத்துவர் அசோகன் கூறும்போது, “ இதுபோன்ற சம்பவங்களுக்கு மொபைல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் காரணம்.. தவறை துணிந்து செய்தால் என்ன என்ற மனநிலை அதன்மூலம் ஏற்படுகிறது.. குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு துணிதல் சமூக வலைத்தளங்கள் தாக்கம் மூலம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். கொலையின் பின்விளைவுகளைக்கூட இவை மறக்க வைக்கும். சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் இடைவெளியும் இதற்கு ஒரு காரணம்” என்றார்.