சென்னை மாதவரம் அருகே கடனை கேட்டு தனியார் வங்கி நெருக்கடி கொடுத்ததால் தாய் - மகன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் தியாகராஜன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. தியாகராஜன் ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். பிருத்விராஜ் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் பிருத்விராஜ் காலமாகிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துமாறு இந்திராணி மற்றும் தியாகராஜனுக்கு தனியார் வங்கி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாராஜன் பணிக்கு சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த இந்திராணி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பணி முடிந்து திரும்பிய தியாகராஜன் தாயார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து, அவரது உடலை இறக்கி கட்டிலில் வைத்துவிட்டு, அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக தாய் மற்றும் சகோதரரை தொடர்பு கொள்ள முடியாததால், வீட்டுக்கு நேரில் வந்த பிருத்விராஜின் மகள் இருவரும் உயிரிழந்ததை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

