காய்ச்சல் நின்றால் ஆபத்து அதிகம்! உடனே மருத்துவரை பாருங்கள்.. மிக மோசமான டெங்கு அறிகுறி!
டெங்கு காய்ச்சல் 3–7 நாட்களில் குறைந்தாலும், அதன்பின் தீவிர டெங்கு உருவாகி உயிருக்கு ஆபத்தான நிலை வரலாம்; கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, ஈறு மற்றும் மூக்கில் ரத்தப்போக்கு, வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், தோலில் நீல நிற புள்ளிகள், மூச்சுத்திணறல், மயக்கம், சிறுநீர் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்; குழந்தைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள் கூடுதல் கவனத்தில் இருக்க வேண்டும்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
மனிதர்களை ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம், உடலுக்குள் பரவும் வைரஸ் தொற்று தான் டெங்கு. DEN-1, DEN-2, DEN-3, DEN-4 ஆகிய 4 வகைகளில் மனிதர்களை தாக்கக் கூடியதாக உள்ள இந்த டெங்கு வைரஸ், பொதுவாக பகலில் கடிக்கும் கொசுக்களால் தான், ஏற்படுகிறது. பொதுவாக, மழைக்காலங்கள் வரும்போது, டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். ஆனால், வழக்கமான எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு டெங்குவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் செப்டம்பர் மாத முதல் 18 நாட்களில் மட்டும் 614 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மொத்தமாக பதிவானவர்களை காட்டிலும், 18 சதவீதம் அதிகம்.
இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாறு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், அதனை முன்கூட்டியே கண்டுபிடிக்க வேண்டிய தேவையும், எப்போது பரிசோதனைகள் வேண்டும் என்பதை அறிய வேண்டியதும் அவசியமாகியுள்ளது. இப்படியான சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் மிக கடுமையான காய்ச்சல் அடிக்கும். உடலின் வெப்பநிலை கிட்டதட்ட 104 ஃபேரன் ஹீட் அளவுக்கு உயர்ந்திருக்கும்.
நெற்றிப் பகுதியிலும், கண்களை அசைக்கும்போதும் மிகக்கடுமையான வலி ஏற்படும். மேலும், தசைகளிலும், மூட்டுகளிலும், எலும்புகளே உடைவது போல் வலி ஏற்படும். குமட்டல், உடல்சோர்வு, பசியின்மை மற்றும் வாந்தி வருவதோடு, உடலில் சிவப்பு நிற தடிப்புகளும் ஏற்படும். இந்த அறிகுறிகள், கொசு கடித்த 4 முதல் 10 நாட்களுக்குள் தோன்றும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில், சாதாரண காய்ச்சல் போலவே, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தோன்றும். இதனால், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டுக்கு, திடீர் காய்ச்சல், உடல் வலி, குமட்டல் சோர்வு இருக்கும். எனவே, இதனை வேறுப்படுத்துவதற்கு முக்கிய அறிகுறியாக, தோல் தடிப்புகளையும், ரத்தப்போக்கு அறிகுறிகளையும் சொல்லலாம். இந்த தனித்துவமான அறிகுறிகள், டெங்குவால் மட்டுமே வரும். இதற்கிடையே, ஒருசில அறிகுறிகள் வந்துவிட்டால், ஒரு நிமிடம் கூட நாம் தாமதிக்கவே கூடாது. உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, நோய் வந்த 3 முதல் 7 நாட்களில் காய்ச்சல் குறைவதால், நோய் குணமாகிவிட்டது என்று சிலர் அலட்சியம் ஆகிவிடுகிறார்கள். ஆனால், இந்த நேரத்தில் தான் தீவிர டெங்கு எனும் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம். கடுமையான வயிற்று வலி, தண்ணீரை கூட குடிக்க முடியாமல் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தல், ஈறுகள், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், வாந்தியிலேயோ, மலத்திலேயோ ரத்தம் கலந்து வருதல், தோலில் ஏற்படும் ரத்த புள்ளிகள் திடீரென நீல நிறமாக மாறுதல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. மேலும், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் ஏற்படுவது, சிறுநீர் அளவு மிகவும் குறைந்து போதல் போன்றவை ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம். குழந்தைகளும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த வைரசால் எளிதில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இப்படியான பாதிப்பு உள்ளவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

