ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழகத்தில் ஹெச்ஐவி பாதிப்பிற்கு காரணம் தெரியாத சிறார்களின் எண்ணிக்கை இரண்டாண்டுகளில் உயர்ந்துள்ளது. கவலையளிக்கும் ஹெச்ஐவி புள்ளிவிவரத்தால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு 311 சிறார்கள் ஹெச்ஐவி பாதிப்புடன் இருந்தனர். இதில் 289 குழந்தைகள் தங்களது தாய்மார்களிடமிருந்து பாதிப்படைந்தது தெரியவந்தது. 22 சிறார்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. 2017ம் ஆண்டில் ஹெச்ஐவி பாதிப்புக்கான காரணம் தெரியாத சிறார்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் சிறார் மத்தியில் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஹெச்ஐவி பாதிப்பு உள்ள சிறார்களின் எண்ணிக்கை இரண்டாண்டுகளில் 25 சதவீதம் குறைந்துள்ள போதிலும் எதனால் ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது என தெரியாத சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது. எனவே பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டத்தில் பாலியல் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது குறித்து கல்வித்துறையுடன் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.