ஏரியா பிரச்னை: சண்டையிட்டுக் கொண்ட குரங்கு கூட்டம் - வீடியோ
தமிழக - கேரள எல்லையான குமுளியில் ஏரியா பிரச்னை காரணமாக இரு குரங்கு கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று கடுமையாக சண்டையிட்டு கொண்டன.
இரு குரங்குக் கூட்டங்களுக்கு இடையே நடந்த இந்தப் போர் தமிழக கேரள எல்லையான குமுளியில் அரங்கேறியது. பேருந்து நிலையத்தை போர்க்களமாக மாற்றிய குரங்குகள் பலத்த சத்தத்துடன் சண்டையிட்டன. குமுளி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள மேகமலை வன உயிரியல் காப்பகம் மற்றும் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உள்பட்ட வனங்களில் ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
அவற்றில் சில உணவு தேடி குமுளி பேருந்து நிலையத்திற்கு வருவது வழக்கம். அவ்வாறு சாப்பிட வந்த குரங்குகள் திடீரென சண்டையில் இறங்கின. தங்கள் இடமான பேருந்து நிலையத்திற்குள் மற்றொரு குரங்குக் கூட்டம் வந்ததை அவற்றால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கூர்மையான பற்கள் தெரிய வாயைத் திறந்து பலத்த ஒலியெழுப்பிய குரங்குகள் எதிரணியை நோக்கி பாய்ந்தன. அவையும் கோதாவில் இறங்க இரு குரங்குக் கூட்டங்களும் கடும் கோபத்துடன் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தாவித்தாவி சண்டையிட்ட குரங்குகள், எதிரணியை விரட்டி அடித்தன.
பொதுவாக கூட்டமாக வாழும் குரங்குகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக் கொள்ளும் எனக்கூறும் வனத்துறையினர், தங்கள் எல்லைக்குள் வேறு கூட்டத்தை நுழைய விடாது எனத் தெரிவிக்கின்றனர்.

