வறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா

வறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா
வறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா

திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவர் தவறவிட்ட பர்ஸை, கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமி மோனிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

சேலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு குகை காளியம்மன் மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, கோயில் அருகில் ஒரு மணி பர்ஸ் கீழே கிடப்பதை கண்டு சிறுமி மோனிகா என்பவர் எடுத்துள்ளார்.

சிறுமி மோனிகா பர்ஸில் இருந்த பணம் மற்றும் ஆவணங்கள் கண்டவுடன் கொஞ்சமும் சலனப்படாமல் உடனடியாக கோயில் அருகில் இருந்த காவல்நிலைய முகாமில் மோனிகா  ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மணிபர்ஸ் காணவில்லை என ஒருவர் புகாருடன்வந்திருந்தார்.பின்னர் காவல்துறையின் விசாரணைக்கு பிறகு அவரின் பர்ஸ் என உறுதி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. 

பர்ஸை பெற்றுக்கொண்ட  அந்த நபர் சிறுமி மோனிகாவின் நேர்மையை பாராட்டி கொஞ்சம் பணம் கொடுக்க, சிறிய தயக்கத்துடன் மோனிகா பெற்றுக்கொண்டார். மோனிகாவின் தோற்றமே ஏழ்மையான நிலையை காட்டியது. ஆனாலும் "வறுமையிலும் நேர்மை" யை கடைபிடித்த மோனிகாவை  சேலம் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர். சிறுமி மோனிகா  சேலம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் : மோகன்ராஜ் - செய்தியாளர்,சேலம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com