ஓபிஎஸ் மகன் தொகுதியில் ஆரத்தி எடுக்க டோக்கன் வழங்கியதாக சலசலப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய பகுதியில் இன்று காலை முதல் அதிமுக சார்பாக தேனி மக்களவை வேட்பாளர் ரவிந்தரநாத் குமாரும், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மயில்வேல் ஆகிய இருவரும் ஒன்றாக திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சாரமானது ஜி.கல்லுப்பட்டியில் துவங்கி கெங்குவார்பட்டி, தேவதானபட்டி, குள்ளப்புரம், ஜெயமங்களம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் நடைபெற்றது.
இப்பிரச்சரத்தின் போது அந்தந்த பகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு பெண்களை அழைத்து ஆராத்தி எடுக்க கூட்டத்தை கூட்டினர். பொதுவாக தேர்தல் நேரங்களில் ஆராத்தி எடுத்தால் பணம் வழங்கப்படுவதை தேர்தல் ஆணையம் தேர்தல் விதி மீறல் என்று கூறியுள்ளது. இதனால் ஆராத்திக்கு பணம் வழங்குவதை நிறுத்தி தற்பொழுது நூதன முறையில் ஆராத்திக்கு பணம் வழங்கி வருகின்றனர்.
ஆராத்தி எடுக்க ஆர்வம் உள்ள பெண்களுக்கு, வேட்பாளர் வருவதற்கு முன்பே அந்தப் பகுதி கட்சி நிர்வாகிகள் பெயர், சீல் வைத்து வெள்ளை சீட்டை கொடுத்து நிறுத்தி வைக்கின்றனர். வேட்பாளர் பிரச்சாரம் செய்து விட்டு போன பின்பு, அந்தப் பகுதியில் வழங்கிய டோக்கன் சீட்டுகளை வாங்கி கொண்டு அவர்களுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக ஆரத்தி எடுக்க நின்ற பெண்கள் தெரிவித்தனர். இதனால் வீடுகளிலுள்ள சிறுசிறு தட்டுகளை எடுத்து கொண்டு சாலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆரத்திக்காக பெண்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகரால் சலசலப்பு ஏற்பட்டது.