மாமுல் பங்கீட்டில் பிரச்சனை ! ஆபாசமாக பேசிக்கொள்ளும் காவலர்கள் !
மதுரை வைகை ஆற்று மணலை திருடும் கும்பலிடம் பேரம் பேசி, ஆபாசமான வார்த்தைகளை சொல்லி சண்டையிட்டு கொள்ளும் காவல்துறையினரின் வாட்ஸ் அப் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் ஒரு கும்பல் அவ்வப்போது மாட்டு வண்டிகள் மூலமாக மணலை திருடி விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய காவலர் ராம்குமார் மணல் திருட்டு கும்பலிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் திருட்டை கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை அறிந்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், மணல் திருடி கொண்டிருந்த கும்பலிடம் சென்று, ஒரு மாட்டு வண்டிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் தனக்கும் லஞ்சம் தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ராம்குமாரும், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரனும் பணம் பெறுவது தொடர்பாக ஆபாசமாக பேசி சண்டையிட்டு கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் வழியே காவலர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ பரவி வைரலாவதை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், காவலர் ராம்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடியோ குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

