ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி என ஆசைக்காட்டி மோசடி..!
கோவையில் ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வதாகக்கூறி பொது மக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்தவரை பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து, யூரோப்பியன் ஃபண்ட் என்ற பெயரில் ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வதாகக்கூறி பணம் வசூல் செய்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் என ஆசைகாட்டி 50-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லி, மும்பை போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று மக்களிடம் நம்பிக்கையை பெற்றதாக தெரிகிறது. பணம் பெற்று பல மாதங்கள் கடந்த பின்னும் செந்தில்குமார் பேசிய தொகையை திருப்பித்தரவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் புகார் அளித்தவர்களில் சிலர் செந்தில்குமாரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.