தேனி: பாரதப் பிரதமரின் திட்டம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி என புகார்

தேனி: பாரதப் பிரதமரின் திட்டம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி என புகார்
தேனி: பாரதப் பிரதமரின் திட்டம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி என புகார்

பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் ரூ.16 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக பெண் மீது ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா. இவருடன் தேனி நகரின் பழனிசெட்டிபட்டி, தேனி அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், கொடுவிலார்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் முரளிதரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 'வில்லேஜ் பீப்பிள் டெவலப்மெண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில் சென்னையில் இயங்கும் ஏஜென்சி அலுவலகத்தின் கிளை அலுவலகம் எனக் கூறி தேனி விவிஜி பேக்கரி தெருவில் உள்ள சீனியம்மாள் காம்ப்ளக்ஸில் அனுமன் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு அலுவலகம் இயங்கி வந்தது. 

இந்த அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி கவிதா என்பவர் நடத்தி வந்தார். வீட்டிலிருந்தே சுய தொழில் செய்யலாம் என்ற விளம்பரத்தை பார்த்து நாங்கள் அவருடன் தொடர்பு கொண்டோம்.

முதலில் 2,300 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மெழுகுவர்த்தி தயாரிக்கும் அச்சு வழங்கினார். வேலை கொடுத்து சம்பளம் கொடுப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். அடுத்து மெழுகுவர்த்தி தயாரிக்க பெரிய அச்சு வந்திருக்கிறது அதற்கு 4 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதையும் செலுத்தினோம்.

இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனாக இரண்டு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுத் தருவதாகவும், வாங்கும் கடன் தொகையில் பாதி செலுத்தினால் போதும் மீதி தொகை மாதத் தவணையாக செலுத்தலாம் என்றும் கூறி தேனி நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களிடம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 16 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில், திடீரென்று அலுவலகத்தை காலி செய்த அவர், தலைமறைவாகி விட்டார். மொபைல் போனில் தொடர்பு கொண்டாலும் அவர் மொபைல் போன் உபயோகத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே கிராம பெண்களிடம் பாரதப் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி பணம் மோசடி செய்த கவிதா என்ற பெண்ணை கைது செய்து ஏழை பெண்களான, தங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மோனிஷா என்பவர் தலைமையில் வந்த பெண்கள் திரளாக சென்று தேனி ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனவை பெற்றுக் கொண்ட தேனி ஆட்சியர் இது குறித்த நடவடிக்கைக்கும் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com