சென்னை: லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என பணம் பறிக்க முயற்சி; உஷாரான அதிகாரியின் மனைவி

சென்னை: லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என பணம் பறிக்க முயற்சி; உஷாரான அதிகாரியின் மனைவி
சென்னை: லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என பணம் பறிக்க முயற்சி; உஷாரான அதிகாரியின் மனைவி

நீர்வளத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக் கூறி ரூ.25 லட்சம் பணத்தை பறிக்க முயற்சி. அதிகாரியின் மனைவி உஷாரானதால் பணம் தப்பியது.

சென்னை தரமணியில் உள்ள அரசு நீர்வளத் துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோகன் (56). இவர் கடந்த 23 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிக் கொண்டு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில், தங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. உங்களை கைது செய்ய வாரண்டும் உள்ளது. அதை சரி செய்வதற்கு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பயந்துபோன அசோகன், வாகன ஓட்டுநர் முகுந்தன் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் ஆகிய 3 பேரும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அசோகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அசோகன் தனது வீட்டில் பீரோவில் மனைவி ஏதாவது பணம் வைத்திருக்கிறாரா என பார்த்துள்ளார்.

அப்போது அதில், பணம் எதுவும் இல்லாததால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஐஓபி வங்கி லாக்கரில் பணம் இருக்கிறது. அங்கு சென்று பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி வீட்டில் இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அசோகன் சென்றுள்ளார். ஆனால், அசோகனின் மனைவி அருள்மொழிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து கணவரின் உடன்பிறந்த தம்பி கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி அண்ணாதுரைக்கு நடந்த சம்பவம் குறித்து அருள்மொழி போனில் விளக்கியுள்ளார். அவர் விசாரித்ததில் வந்த நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசாரை உஷார் படுத்தி அவரை பிடிக்கக் கூறினார்.

இதைத் தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை ஐஓபி வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட அருள்மொழி, தனக்கும் கணவருக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும் அதனால் லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அசோகன் வங்கிக்குச் சென்றபோது மேலாளர் லாக்கரை திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் அசோகன், ஓட்டுநர் முகுந்தன், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக் கூறிய நபர் ஆகிய மூவரும் காரில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த அசோகனை தொடர்பு கொண்ட போலீசார், காரை ஓரமாக நிறுத்தும் படி கூறியுள்ளனர். உடனே அந்த மர்ம நபர் உஷாராகி யார் என விசாரித்துள்ளார். போலீஸ் எனக் கூறியதும் இறங்கி நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறி தப்பிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அசோகன் மனைவியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது வந்த நபர் மோசடி நபர் என தெரியவந்ததை அடுத்து மோசடியில் ஈடுபட முயன்றவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு தரமணி காவல் நிலையத்தில் நீர்வளத் துறை அதிகாரி அசோகன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மோசடி நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என்றதும் அதிகாரி அசோகன் ஏன் பயந்தார்? எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com