சேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு
ஏரியில் கால்நடைகளை குளிக்க வைத்த போது சேற்றில் சிக்கி தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் ஜென்சிராமன் ஏற்கனவே இறந்துவிட்டார். சுகுணா தன்னுடைய மகன் கமலக்கண்ணன் (27) மற்றும் மகள் ரோஜா (25) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வந்தனர். வழக்கம் போல் நேற்று மாடுகளை மேய்க்கும் போது, அங்குள்ள திருநின்றவூர் ஏரியில் இறங்கிய மாடுகளை எழுப்புவதற்கு சுகுணா ஏரியில் இறங்கினார். சேற்றில் சிக்கிய அவரை காப்பாற்ற மகள் ரோஜாவு இறங்கினார். இருவருமே சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர்.
இது தெரியாமல் வேலைக்கு சென்ற கமலகண்ணன், இரவு நீண்ட நேரமாகியும் தாயும், தங்கையும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியுள்ளார். காலையில், ஏரியின் அருகே சென்று பார்த்த போது 2 சடலங்கள் மிதந்து வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், தங்களது காவல் எல்லையில் இந்த பகுதி இல்லை என்றும், திருநின்றவூர் காவல் எல்லை பகுதி எனவும் கூறியுள்ளனர். இதனால் மீட்பு பணிகள் நடைபெறவில்லை.
திருநின்றவூர் காவல் துறையினரும் வந்து பார்த்து விட்டு, இது தங்களது எல்லை இல்லை என கூறியதால், மீட்பு பணி நடைபெறுவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டது. 2 சடலங்கள் காலை முதல் மிதந்து வரும் நிலையில், காவல் எல்லை பிரச்சினையால் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக திருநின்றவூர் காவல் துறையினர் தங்களது எல்லை என ஒத்துக்கொண்டனர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு 2 சடலங்களும் மீட்கப்பட்டது. இரு சடலங்களும் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கனவே தந்தை இழந்த கமலக்கண்ணன், தற்போது தாயும், தங்கையும் இழந்ததால் கதறி அழுத சம்பவம் காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.