புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம்: “இலக்கை 7 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளோம்” - மோடி

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா 2030 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டியுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிTwitter

ஜி20 உச்சி மாநாட்டின், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் நான்கவாது கூட்டம் சென்னையில் நேற்று துவங்கியது. இதில், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையர், கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இன்று மாலையுடன் இந்த கூட்டம் முடிவடைய உள்ள நிலையில், காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

மின்சாரம்
மின்சாரம்PT

அப்போது பேசிய அவர், “வரலாறும் பாரம்பரியமும் மிக்க நகரத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க மகாபலிபுரத்தை சுற்றிப்பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே,

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

என திருவள்ளுவர் எழுதியுள்ளார். மேகமானது கடல் நீரை முகர்ந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்தியாவில், இயற்கையும் அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன. இவை பல வேதங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் காணப்படுகின்றன. நதிகள் தங்கள் தண்ணீரை குடிப்பதில்லை, மரங்கள் பழங்களை உண்பதில்லை, மேகங்களும் அவற்றின் நீரால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உண்பதில்லை, இயற்கை நமக்கு வழங்குகிறது. இயற்கைக்கு நாமும் வழங்க வேண்டும். தாய் பூமியை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு. இந்தக் கடமை பலரால் மிக நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது 'காலநிலை நடவடிக்கை' என்ற வடிவத்தை எடுத்துள்ளது.

PM Modi
PM Modipt desk

தெற்கத்திய நாடுகள் குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றன. 'ஐ.நா. காலநிலை மாநாடு' மற்றும் 'பாரிஸ் ஒப்பந்தம்' ஆகியவற்றின் கீழ் மேம்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா 2030 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா உள்ளது. 2070 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்பாடு இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

'மிஷன் அம்ரித் சரோவர்' என்பது ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சியாகும். இந்த பணியின் கீழ், சுமார் ஒரு வருடத்தில் 63 ஆயிரம் நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த பணி முழுக்க முழுக்க சமூகத்தின் பங்கேற்பு மூலமாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. எங்கள் 'கேட்ச் தி ரெயின்' பிரசாரமும் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் நீரை சேமிக்க, 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பயன்பாடு மற்றும் ரீசார்ஜ் கட்டமைப்புகளும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் மண் மற்றும் நீர் நிலைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அடையப்பட்டது.

கங்கை நதியை சுத்தப்படுத்த 'நமாமி கங்கே மிஷனில்' சமூகத்தின் பங்களிப்பையும் திறம்பட பயன்படுத்தியுள்ளோம். இது ஆற்றின் பல பகுதிகளில் டால்பின் மீண்டும் தோன்றுவதில் ஒரு பெரிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com