சுதந்திர இந்தியாவின் மோசமான பிரதமர் மோடி – சீமான் கடும் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது...
அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை?
தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும் ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள். எந்த நிலையிலும் ஊழலுக்கு எதிராக நான் பேசுவேன் என அண்ணாமலை சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது. திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவது போல் அதிமுகவின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். திமுகவிற்கு எதிராக மட்டும் ஊழல் பட்டியலில் வெளியிட்டால் அது முழுக்க அரசியல் லாபம் மட்டுமே.
அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் புனிதமானவர்கள் என்பதை காட்டுவதற்காக அண்ணாமலை முயற்சிக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது. அண்ணாமலை ஏன் கோடநாடு கொலை வழக்கு குறித்து பேச மறுக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதனால் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு இருக்கிறது.
மணிப்பூர் கலவரத்தை பாஜக அரசு விரும்புகிறது
மணிப்பூர் விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸும் பேசுவது தேர்தல் லாபத்திற்காக மட்டுமே. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் நிர்வாணமாக பதாகை ஏந்தி ராணுவத்துக்கு எதிராக போராடினார்கள். அன்று ராணுவம் பெண்களை வன்புணர்வு செய்தது இன்று இரண்டு இனங்கள் மோதுகிறது இதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தான். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புகிறது.
தென் மாநிலங்களில் பிஜேபி-யால் வளர முடியவில்லை
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் பிஜேபியால் வளர முடியவில்லை. அதனால் இங்கு வளர வேண்டிய கட்டாயம் இருப்பதால் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார். இதற்காக தமிழில் பேசுவது, பாரதியார் கவிதைகள், ஒளவையார் பற்றி பேசுகிறார். இதனால் தமிழகத்தில் போட்டியிட்டால், நாட்டின் பிரதமராக இருந்தவர் போட்டியிடுகிறார் என்ற அதிர்வலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்.
கருணாநிதிக்கு முன் கருணாநிதிக்கு பின் என்ற நிலைப்பாட்டை நிறுவுகிறார்கள்
திராவிட மாடல் குஜராத் மாடல் போல் நடைபயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ குறுக்க மறுக்க நடந்து முடித்து விட்டார். அதன் பிறகு ராகுல் நடந்தார் என்ன நடந்தது. நடைப்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் கடற்கரையிலோ, பூங்காவிலோ நடந்து செல்லுங்கள். கருணாநிதிக்கு பின் கருணாநிதிக்கு முன் என்ற நிலைப்பாட்டை நிறுவுகிறார்கள். இந்த அரசும் அதிகாரமும் ஒரே குடும்பத்திடம் இருந்து விடாது. இந்த நிலை மாறும். அப்படி மாறும்போது அனைத்தும் தலைகீழாக மாறும்.
சுதந்திர இந்தியாவின் மோசமான பிரதமர் மோடி
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் மிக மோசமான பிரதமர் மோடி, மிக மோசமான முதலமைச்சர் ஸ்டாலின். அமெரிக்காவில் மலக்குழியில் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில் நுட்பத்தை இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும். இந்தியாவில் யாரும் வாழ முடியாது; என்று தெரிவித்தார்.