சிவாகாசியில் காட்சிப்பொருளாக மாறிப்போன நவீன கழிப்பறைகள்
சிவகாசி நகராட்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகராட்சி 24 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் நவீன கழிப்பறை காட்சிப்பொருளாக மாறி உள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எம்.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரால் கடந்த மாதமே இக்கட்டிடம் திறப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டும், இதுவரை கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமங்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த பகுதியில் பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள், மாணவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் நவீன கழிப்பறையை உடனடியாக திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய நகராட்சி ஆணையாளர் முஹமத் சிராஜ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிப்பிடம், விரைவில் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

