தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளபடுத்தும் நவீன மென்பொருள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்து மக்களின் விமானம் தான் ரயில். முன்பெல்லாம் பயணிகள் கூடிய ரயில் நிலையங்கள் அண்மைக்காலமாக குற்றங்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது. 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொல்லப்பட்டது முதல் அண்மையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழி வெட்டப்பட்டது வரை பல சம்பவங்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம். ரயில் மூலம் குழந்தைகள், போதைப்பொருள்கள் கடத்தப்படுவதும் நடந்த வண்ணமே உள்ளது. இவற்றையெல்லாம் தடுக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாக EDGE FAST என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென்பொருள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக சோதனை அடிப்படையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களுடன் EDGE FAST இணைக்கப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் என இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ரயில் நிலைய கேமராவில் தென்பட்டால் EDGE FAST மென்பொருள் உடனடியாக அடையாளம் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிடும். இந்த புதிய மென்பொருளின் செயல்பாட்டை ரயில்வே எஸ்.பி. ரோஹித்நாதன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், குற்றவாளிகள் மட்டுமின்றி ரயில் நிலையத்தில் யாரேனும் தலைக்கவசம் அல்லது முகமூடி அணிந்திருந்தாலோ, ஏதேனும் பை அல்லது பெட்டி நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தாலோ அவற்றை அடையாளம் கண்டு EDGE FAST தகவல் கொடுக்கும். அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் யாரேனும் அழுது கொண்டிருந்தாலோ அல்லது கோபத்துடன் இருந்தாலோ அதையும் கூட EDGE FAST மென்பொருள் கண்டறியும். தற்போது சென்னை சென்ட்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள EDGE FAST மென்பொருள் படிப்படியாக திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ரயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது என்று கூறினார்.

