தமிழக சுற்றுலாப் பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை

தமிழக சுற்றுலாப் பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை
தமிழக சுற்றுலாப் பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை

தமிழகத்தின் பிரபல சுற்றுலாப் பகுதிகளான கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த மே மாதம் இறுதி வாரம் முழுவதும், வெப்ப சலனத்தால் இடைவிடாமல் பகலில் கோடை மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதன் தாக்கம் தெரிய துவங்கியுள்ளது. காலையில் குளிர்ந்த மேக மூட்டங்களுடன் காணப்படும் வானிலை, நண்பகல் வேளையில் சாரல் மழையாக துவங்கி, மிதமான மழையாக நின்று நிதானமாக ஒருமணி நேரம் இடைவிடாது பெய்தது. தென்மேற்கு பருவமழையால், மலைப்பகுதிகளில் கோடைக்காலம் முடிந்து, மழைக்காலம் துவங்கியதன் சூழல் உணரப்படுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மதிய நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிலமணி நேரம் விடுதிகளிலேயே முடங்கினர். நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுடன் மழை பெய்துவந்தது.

இந்த மழை உதகை சேரிங்கிராஸ், மார்கெட், பேருந்து நிலையம், குன்னூர் நகர் பகுதி, மவுண்ட் ரோடு, பெட்போர்டு, மவுண்ட் பிளசன்ட், ஆள்வார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கோத்தகிரியில் பேருந்து நிலையம், அரவேனு, ஜான்ஸ் கொயர், டானிங்டன், ஒரசோலை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பெய்தது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com