அரிவாள், கத்தியுடன் பெட்ரோல் பங்க்கில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்.. அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
சென்னை அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சினிமா சண்டை காட்சியைப் போல் நடந்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில், ராஜிவ்காந்தி என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஆட்டோவில் வந்த மணி என்பவர், ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், ஆட்டோவையும், அதிலிருந்த இருவரையும் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பிச் சென்ற மணி, சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பலை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்த கும்பலைக் கண்டதும், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிதறி ஓடினர். பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடிகளை உடைத்த இளைஞர்கள், பங்க் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தினர். ஆட்டோவுடன் சிறைபிடிக்கப்பட்டிருந்த இருவரை கத்தி முனையில் அங்கிருந்து மீட்டுச் சென்றனர். இதுகுறித்த விசாரணையில், தாக்குலில் ஈடுபட்ட மணி, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணி உள்ளிட்ட 9 பேரைத் தேடி வருகின்றனர்.