தொழிலதிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய கொலைவெறி கும்பல் - சிசிடிவி காட்சி
சென்னையில், கிளப் ஒன்றின் வரவு செலவு கணக்குகளை கேட்ட நபர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் ஆந்திரா கிளப்பில் உறுப்பினராக உள்ள தொழில் அதிபர் ஸ்ரீதர், வரவு செலவு கணக்குகளைக் கேட்டதாகவும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஆந்திர கிளப்பின் மற்றொரு உறுப்பினரும், அரசு ஒப்பந்தக்காரருமான ஜனார்த்தனன், கூலிப்படையைக் கொண்டு ஸ்ரீதரைக் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்ரீதரை பைக்கில் வந்த நபர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்து விட்டு செல்லும் காட்சி சிசிடியில் பதிவாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் ஒப்பந்தக்காரர் ஜனார்த்தனனையும், கூலிப்படையைச் சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.