3 முறை காங்கிரஸ் எம்எல்ஏ.. ஆனாலும் மனக்கசப்பு.. விஜயதரணி பாஜகவில் இணைய காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
MLA Vijayadharani
MLA Vijayadharanipt desk

மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர்

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர், 2011-ஆம் ஆண்டு முதல் மூன்று முறை தொடர் எம்.எல்.ஏ என பல பொறுப்புகளில் இருக்கும் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ள செய்தி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் அவருக்கு ஏற்பட்ட நிராகரிப்புகளே அவரது இத்தகைய முடிவுக்கு காரணம் என சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

MLA Vijayadharani
MLA Vijayadharanipt desk

2021-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றது. அதில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால் சீனியர்களுக்கே சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி என்ற சூழல் உருவானது. அப்போது காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. பதவியை பிடிக்க விஜயதரணி, பிரின்ஸ், செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகவே அப்போது சொல்லப்பட்டது.

கொறடாவாக நியமிக்கப்பட்ட விஜயதாரணி

அந்தக்கால கட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் மட்டும் இழுபறி நீடித்துக் கொண்டிருந்தது.

சட்டமன்றத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸில் பேச்சுவார்த்தை தொடர்ந்த வண்ணமே இருந்தன. இறுதியாக, சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பு எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகைக்கு சென்றது. கொறடாவாக விஜயதரணி நியமிக்கப்பட்டார்.

bjp
bjp pt desk

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணிக்கு இறுதியில்தான் சீட் உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக 25 தொகுதிகளை ஒதுக்கி இருந்த நிலையில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தாமதமாகவே வெளியிட்டது காங்கிரஸ். அதில் விளவங்கோடு தொகுதியும் ஒன்று. விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என கட்சியினர் போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் வெளியானது. அப்போதே, பாஜகவில் இணைந்தால் விளவங்கோடு தொகுதி அவருக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என்ற பேச்சுவார்த்தை பாஜக தரப்பில் இருந்து நடந்ததாகவும் தகவல்கள் வந்தன.

எம்.பி சீட் கேட்டிருந்த விஜயதரணி

இதை அனைத்தையும் மறுத்தார் விஜயதரணி. “எனது தொகுதியில் மக்களோடு இணைந்து நன்றாக வேலை பார்த்துள்ளேன். மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டு காலமாக ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ நான்தான். கட்சி மேலிடம் சரியான பார்வையை செலுத்தும் என நம்புகிறேன். கட்சி அறிவிப்பு வெளியிடும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்” என்றே தெரிவித்திருந்தார்.

Bjp-Congress
Bjp-CongressFile image

கட்சியில் சீனியரான விஜயதரணி பல ஆண்டுகளாக எம்.பி சீட் கேட்டிருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “கட்சியில் சீனியர்கள் தனக்கு சீட் கேட்கிறார்கள் அல்லது தனது பிள்ளைகளுக்கு சீட் கேட்கிறார்கள். 72, 75 வயதுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவர் நிற்கிறார். அடுத்து பிள்ளையை கொண்டு வருவார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியில் நடக்கிறது என்பதை ராகுல்காந்தியே ஒத்துக்கொண்டுள்ளார்” என மறைந்த எம்.பி. வசந்தகுமாரை சூசகமாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

தனது கருத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பவர் விஜயதரணி

வரும் நாடாளுமன்ற தேர்தலிலாவது போட்டியிட்டு எம்.பி. ஆகும் முனைப்பில் இருந்த அவருக்கு இம்முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏக்கள், மக்களவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றால், தொடர்ந்து வரும் இடைத்தேர்தலை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எப்போதும் தனது கருத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பவர் விஜயதரணி. ஒரு உதாரணமே அதற்கு சான்று. சட்டப் பேரவையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் திறப்பதற்கு அப்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி வரவேற்பு தெரிவித்திருந்தார். திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியே புறக்கணித்த நிலையில், சபாநாயகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜயதரணி.

MLA Vijayadharani
MLA Vijayadharanipt desk

இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், “தமிழகத்தில் பெண் தலைவர்களுக்கு இடமில்லையா?. பெண் தலைவரின் படம் ஏன் இடம்பெறக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட உரிமையை பறிக்க யாராலும் முடியாது. கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து படத்திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. உருவப்பட திறப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜயதரணி

இந்நிலையில், தொலைக்காட்சி; விவாதங்களில் பங்கேற்காமல் அமைதியாக இருந்து வந்த விஜயதரணி பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தியை காங்கிரஸ் மறுத்துவந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com