“கூவத்தூர் விஷயத்தை நீதிபதியிடம் சொல்வேன்” - கருணாஸ் ஆவேசம் !

“கூவத்தூர் விஷயத்தை நீதிபதியிடம் சொல்வேன்” - கருணாஸ் ஆவேசம் !
“கூவத்தூர் விஷயத்தை நீதிபதியிடம் சொல்வேன்” - கருணாஸ் ஆவேசம் !

 “முதலமைச்சரை நான் அடிப்பேன் என உளவுத்துறை தலைமை அதிகாரியே முதலமைச்சரிடம் கூறுவது சரியா?” என எம்எல்ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்‌, அவதூறாக பேசுவது, மிரட்டல் விடுக்கும் விதமாக பேசுதல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கருணாஸ் தலைமறைவானதாக காவல்துறைத் தரப்பில் தகவல் வெளியானது. ஆனால், தா‌ன் தலைமறைவு என வெளியான செய்திக்கு கருணாஸ் மறுப்பு தெரிவித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன் வீட்டில்தான் இருப்பதாகவும் புதிய தலைமுறையிடம் கருணாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் சாலிகிராமம் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “2009ஆம் ஆண்டு முதல் நான் கட்சி நடத்துகிறேன். என்மீதும், என் கட்சியினர் மீதும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டதில்லை. எனது வீடியோ முழுமையாக பார்த்தால் தான் புரியும். அதை சில ஊடகங்களே திரித்து வெளியிடுகின்றன. நான் மேடையில் ஒருமையில் பேசியதற்கு, அன்றைய தினமே மனம் வருந்தி, என் மனைவியிடம் வருத்தம் தெரிவித்தேன். கூவத்தூர் விவகாரம் தொடர்பாக பேசியதை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் அறிக்கையாக கூற இருக்கின்றேன். தேவைப்பட்டால் அதைக்கூறுவேன். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வாக்களித்து தேர்வு செய்தேன். இதில் என்ன தவறு?. 

யார்? யாரோ? போலீஸை எப்படியோ பேசுகின்றனர். ஆனால் இதுவரை அப்படி எதுவும் பேசியதில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ததில்லை. நான் சமுதாயக் கொலை செய்ய வேண்டும் என கூறவில்லை. இருந்தாலும் என் மனைவியையோ? என் மகளையோ? யாரேனும் கையைப்பிடித்து இழுத்துச்சென்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? நான் பேசிய வீடியோவை துண்டு துண்டாக வெட்டி பரப்புகின்றனர். எனது வீடியோவில் முனையும் இல்லை. அடியும் இல்லை. நான் பேசியதில் யார் மனதும் புண்பட்டிருந்தால் மனமார்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். உளவுத்துறையின் தலைமை அதிகாரி, நான் முதலமைச்சரை மறிக்கப்போவதாகவும், அடிக்கப்போவதாகவும், முதலமைச்சரிடமே கூறியதாக தகவல் கேள்விப்பட்டேன். அதைத்தான் ஏன்? உயரதிகாரி இப்படி கூறவேண்டும் என மேடையில் குறிப்பிட்டேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com