கருணாநிதியின் திருக்குவளை இல்ல பதிவேடு : உருக்கமாக எழுதிய ஸ்டாலின்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் நினைவுகளை எழுதியுள்ளார்.
திமுகவில் தலைவராக பதவியேற்ற பின்னர் இறக்கும் வரை தலைவராக இருந்தவர் மு.கருணாநிதி. அவரது மறைவிற்குப் பிறகு திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றுள்ளார். கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் உள்ள திருக்குவளையில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்த வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுள்ளார்.
அங்கு சென்ற ஸ்டாலின் அந்த வீட்டின் பதிவேட்டில் தனது நினைவுகளை உருக்கமாக எழுதிப் பகிர்ந்துள்ளார். அதில், “தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும். வாழ்க கலைஞர்” என கூறியுள்ளார்.