”6 மாதத்தில் ஸ்டாலின் தான் முதல்வர்; திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது” - அனிதா ராதாகிருஷ்ணன்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஏற்கனவே, முதல்வர் விஜயை ஒருமையிலும், ஒரு நடிகையுடன் ஒப்பிட்டும் பேசிய வழக்கில் கைது செய்ப்பட்டு நிபந்தனை ஜாமீனில் தற்போது வெளி வந்திருக்கும் நிலையில், மீண்டும் தவெக அரசையும் முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”சிலர் நமது தலைவர்களை பற்றி கேவலமாக பேசுவது; கழகத்தில் உள்ளவர்களை கைது செய்வது என மிரட்டி பார்க்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொட்டு பார்க்க முடியுமா? விஜய் எந்த வகையில் முதலமைச்சராக வந்தார்.? அவர் எம்ஜிஆரை குறிப்பிடுகிறார். எம்ஜிஆரும் அவரும் ஒன்றா? சினிமா நடிக்கும் போது விஜய் என்பது அரசியலுக்கு வந்ததும் ஜோசப் விஜய் என்பது. திருச்சி தேவாலயத்திலே முட்டி போட்டு நடப்பது. எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அண்ணாவால் பாராட்டப்பட்டார். கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவர் எம்ஜிஆர். நீ எம்ஜிஆரை ஒப்பிட்டு பேசுகிறாய்.
அதேபோல, தற்போது விஜயா ஆட்சி நடத்துகிறார்.? லாட்டரி வியாபாரி ஆதவ் அர்ஜுனா தான் ஆட்சியை நடத்துகிறார். எவ்வளவு நாட்கள் இந்த ஆட்சி நடைபெறும். நான் குறிப்பிட்டு சொல்கிறேன் 6 மாத காலத்திற்கு இந்த ஆட்சி போகவில்லை என்று சொன்னால் பார்ப்போம். 6 மாதத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் வருவார். திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் மத்தியில அமைச்சராக அமர்வார்கள். அந்த காலம் வரும்போது, சினிமாவில் நடிக்கும் போது முதல்வர் என்னென்ன தப்பு செய்தார்? என்பது எல்லாம் வெளியே வரும்.
என்னை ஜெயிலில் பிடித்து போட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமா.? அந்த அம்மாவும் தான் என்னை பிடித்து போட்டார் 37 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தார். இப்போது, இவரும் என்னை பிடித்து போட்டு மிரட்டலாம் என்று நினைத்தார் அது நடக்குமா.? அதேபோல, செந்தில் பாலாஜியால் இடைத்தேர்களில் குழப்பம் ஏற்படும் என்று அவர் மீது வழக்கு போட்டார்கள். ஆனால், அது நடக்கவில்லை. காவல்நிலையத்தில், "நீங்க எம்எல்ஏ பதவிய ராஜினாமா செய்யுங்கள் உங்களை மந்திரி ஆக்குவோம் என கூறினார்கள், அதற்கு நான் மந்திரியாவது கிந்திரி ஆவது என கூறிவிட்டு என்று நான் சம்மதிக்கவில்லை. யார் என்ன செய்தாலும் எங்கள் கழகத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அனித ராதாகிருஷ்ணன் நேற்றைய உரையிலும், முதல்வரை ஒருமையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
