ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப் போவதை பாராட்டுவதாக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை கோரி வரும் 8-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான மதுசூதனன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்தின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். மேலும், கைதிகளை பராமரிப்பது அரசுதான்; ஆனால் அரசே கைதியை போய் பார்க்கிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.