பாலியல் புகார் ஐ.ஜி மீது உடனடி நடவடிக்கை வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி. மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாற்றும் அலுவலகத்திலேயே பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் முதல்வருக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார். புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஐ.ஜி.க்கு உபகாரம் செய்திடும் வகையில் பாதுகாப்பது பெண்ணினத்தின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும், காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக மாறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துறையில் இருந்து அவர் மாற்றப்பட வேண்டும் என்றும், சிபிசிஐடியில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஐ.ஜி. கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.