”தேர்தலுக்காக பிரதமர் சுட்ட பல வடைகள் எல்லாம் ஊசிப்போச்சு”- ராமநாதபுரம் கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

”சிலப்பதிகாரத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முழுமையாக படிக்க வேண்டும் என கனிமொழி சொன்னார். தற்போது ஓய்வு கிடைக்காமல் போகலாம். ஆனால், 2024 ல் ஆட்சியை இழந்த பின் முழுமையாக படிக்கவேண்டும்” என்று பேசினார் முதல்வர்.
mkstalin
mkstalinpt web

ராமநாதபுரத்தில் திமுகவின் தென்மாவட்ட திமுக வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது திமுக. அரசு மருத்துவமனை, 5 ஆயிரம் சுனாமி வீடுகளை கட்டி கொடுத்து பின்தங்கிய மாவட்டத்தை (ராமநாதபுரம்) முன் மாதிரி மாவட்டமாக்கியதும் திமுக அரசு.

”அமைச்சரும், மாவட்ட செயலாளரும் போட்டி போட்டு வேலை செய்யுறாங்க”

பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோவில் தங்க தேரை ஓட்டுயது திமுக அரசு. அமைச்சர் ராஜகண்ணப்பனும் மாவட்ட தலைவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் போட்டி போட்டு வேலை செய்கிறார்கள் (அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் மாவட்ட தலைவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இடையே உட்கட்சி பூசல் இருக்கிறது என கூறப்பட்டு வரும் நிலையில் மாநாடு மேடையில் தமிழக முதல்வர் சூசகமாக அதற்கு பதில்).

இந்திய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக பல முறை இருந்தது திமுக. மக்களுக்கு நமது ஆட்சி மேல் நம்பிக்கை உள்ளது. விடியல் பயணத்தை துவங்கவுள்ளோம். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்துவதால் நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள்.

”ராமநாதபுரத்தில் பேசியதையாவது மோடி செய்துள்ளாரா?”

ராமநாதபுரத்தில் தேர்தலை சந்திக்க இருப்பதாக பேசப்படுகிறதே. நான் கேட்கிறேன், ராமநாதபுரத்தில் பேசியதையாவது மோடி செய்துள்ளாரா? திமுகவினரை மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது. மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்பதற்கு உதராணம் இலங்கை கடற்படையினரால் படகுகள் சிறைபிடிப்பது, மீனவர்களை தாக்குவது, சுட்டுக்கொள்வது போன்றவை இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பல வடைகள் சுட்டார். அந்த வடைகள் எல்லாம் தேர்தலுக்கு பின் ஊசிப்போய்விட்டது

”2024-க்கு பிறகுஓய்வுதான் - அப்போது சிலப்பதிகாரம் படிக்கலாம்”

சிலப்பதிகாரத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முழுமையாக படிக்க வேண்டும் என கனிமொழி சொன்னார். தற்போது ஓய்வு கிடைக்காமல் போகலாம். ஆனால், 2024 ல் ஆட்சியை இழந்த பின் முழுமையாக படிக்கவேண்டும். மணிப்பூர் மாநிலத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த பின் அவர் பேசுகிறார். திமுகவினர் அனைவரும் உடனடியாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். இந்தியாவை காப்பற்ற போவது இந்தியா கூட்டணி மட்டும் தான், நற்பதும் நமதே நாடும் நமதே” என்றார்.

'மதுரை எய்ம்ஸ்; டெண்டர் உருண்டு வரவே 9 ஆண்டுகள்'

மதுரையில் செங்கல் மட்டும்தான் இருக்கிறது; மருத்துவமனை இன்னும் வரவில்லை. 2015ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம் டெல்லியில் இருந்து டெண்டர் அளவிற்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பாங்களா? இல்லை இதுவும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து ஆண்டு முழுவதும் பல்லாயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்கிற பாஜக அரசால், ரூ.1,000 கோடி ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக்கொடுக்க மனமில்லை. இதையெல்லாம் நாம் கேட்பதால் திமுகவை கடுமையாக தாக்குகிறார்கள்; பிரிவினையை தூண்டுகிறோம் என்று திசை திருப்புகிறார்கள்; பொய் சொல்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலு பேசியதை நாட்டை பிரிப்பதாக வெட்டி, ஒட்டி வாட்ஸ்அப்பில் பரப்புகின்றனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com