“வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள்” - ‘குட்கா’ரெய்டு பற்றி ஸ்டாலின்
குட்கா ஊழல் அதிகாரிகள் இல்லங்களிள் சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக் காரணமாக அமைந்தது. இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ, விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மந்தபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அலுவகத்தில் ஆஜரான குட்கா நிறுவன உரிமையாளரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் குட்கா விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டது. இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக இன்று 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து குட்கா ஊழல் அதிகாரிகள் இல்லங்களிள் சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் “குட்கா ஊழலை மறைக்க அதிமுகவின் மூன்று முதலமைச்சர்களும், இரு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, இப்போது அதிரடியாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சர் விஜய பாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக, வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. அசோக்குமாரை இரவோடு இரவாக பதவி விலக வைத்து, ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். அந்தக் கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவை, வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள். பிறகு அந்த வருமான வரிக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று, தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது”என்று சாடியுள்ளார்.