சொந்த தொகுதியில் பேட்மின்டன் விளையாடி அசத்திய ஸ்டாலின்
கொளத்தூரில் உள்விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைத்து அங்கிருந்த பயிற்சியாளருடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்மின்டன் விளையாடினார்.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடி, தையல் இயந்திரம், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து மாணவி அனிதாவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக் கூடத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தனது அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கை திறந்து வைத்த ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் பேட்மின்டன் விளையாடினார்.
எதிரில் பயிற்சியாளர் வீசிய இறகுப் பந்தை சரியாக திருப்பி அடித்து ஸ்டாலின் விளையாடியதைக் கண்டு சுற்றியிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
சமீப காலமாக விளையாட்டு மைதானங்களை திறந்து வைக்கச் செல்லும் அரசியல் தலைவர்கள், அங்கு சிறிது நேரம் விளையாடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். அண்மையில் சேலத்தில் முதல்வர் பழனிச்சாமி பேட்மின்டனும், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட்டும் விளையாடினர்.