"கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை.." நிதி ஆயோக் கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் என்ன? - முதல்வர் விளக்கம்!
நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிரதமரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
கோரிக்கைகள் என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு என்ன தேவை என்பதை பட்டியலிடப்பட்டு அது தொடர்பாக நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசினேன். குறிப்பாக கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் குறித்தும், செங்கல்பட்டு திண்டிவனம் நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தேன்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன்.
இதற்கு முன்னர் மெட்ரோ திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படாத போதும் பிரதமரை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.அப்போது அந்நிதியானது விடுவிக்கப்பட்டது. பிரதமரும் நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள் நாங்கள் நிறைவேற்றி தந்தோம் என்று கூறினார். அதன் அடிப்படையில் நிதியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் குறித்து பேசிய ஸ்டாலின்!
இந்த பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. எப்போது டெல்லி வந்தாலும் அவர்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன். அந்த வகையில் அந்த சந்திப்பு நடைபெற்றது, அந்த சந்திப்பின்போது அரசியலும் பேசினோம்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் அத்துமீறிய செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே கண்டனம் தெரிவித்திருப்பது மிகச் சரியானது.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தேர்தலை நோக்கமாகக் கொண்டு பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பொய் பிரச்சாரங்களையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரின் டெல்லி பயணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த தொடர்பான கேள்விக்கு பதில்அளித்த முதல்வர், என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை அவர்களிடம் இருப்பது போன்று காவி கொடியும் என்னிடத்தில் இல்லை எனவும் தெரிவித்தார்.