மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா வைரஸ்க்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கை இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஊரடங்கு முடிவை தாமதமில்லாமல் அறிவிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடபாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொடர்பான புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திறமைமிக்க மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களால் தமிழகத்தில் இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவது வருத்தம் அளிப்பதாகவும், இது அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் கருத்து, கொரோனா தடுப்பில் தன்னலமற்று பணியாற்றுவோரை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழக மக்களின் நலனுக்காகவே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அதனை வரவேற்காமல் கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடத்தை காட்டுவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.