“ஆந்திர அரசுக்கு எதிராக தடையுத்தரவு பெறவும்”- முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு 22 தடுப்பணைகள் கட்டும் பணிகள் மேற்கொண்டு வருவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற முடியாமல் தமிழக அரசு, சட்டப் போராட்டத்தில் தோல்விடைந்து விட்டதாகக் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கும் இந்த தடுப்பணைகள் கட்டும் பணியை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தவும், ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றிடவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.