எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
mk stalin
mk stalinpt web

சென்னை தியாகராய நகரில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டல், ஆழ்வார் ஆய்வு மையம், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், காலை முதல் 70 வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, பூந்தமல்லியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே பட்டாபிராமில் பணியாளர் ஒருவரின் வீட்டில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

mk stalin
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40+ இடங்களில் வருமானவரித்துறை சோதனை! காரணம் இதுதான்!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் சஞ்சய் சிங் கைதுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் காலை முதல் எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடைபெற்று வரும் சோதனை குறித்து பேசிய அவர், “மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை. எதிர்க்கட்சிகளின் அரசியலை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் எச்சரித்தும் பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. மிக முக்கியமாக சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்துவரும் ஒற்றுமையை கண்டு பாஜக தெளிவாக பயப்படுகிறது. நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் தற்போதைய அரசு வளர்ந்துவரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை தவறாக பயன்படுத்துகிறது. உங்களுடைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com