விரக்தியில் பேசுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்க முடியாத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘திமுக அழிந்து வருகிறது’ என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக-வை வளர்ச்சி பெறச் செய்ய முடியவில்லை. அந்த விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு இதுபோன்ற கருத்துகளை பேசிக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
திமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது என்றும் அதற்கு பல சான்றுகளும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி தராது என மாநில அரசு காலம் தாழ்ந்து அறிவித்திருந்தாலும், மத்திய அரசு அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதால் தான் நெடுவாசலில் போராட்டம் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என மத்திய அரசு அறிவித்தால் நிச்சயமாகப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என கருதுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.