வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம்
நாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு மேலும், டீசல் 75 ரூபாய்க்கு மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையிலும், மத்திய அரசு வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாய் மதிப்பை சரி செய்ய எவ்வித பொருளாதார நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து, பொருள் போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு விற்பனை வரியை குறைப்பது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பொறுப்பற்ற செயல் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின், விற்பனை வரியை குறைத்து மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல் , டீசல் விலை உயர்வின் அழுத்தத்தை குறைத்திட தமிழக அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டில் எட்டாத உயரத்திற்கு, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திட அனுமதித்து விட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம் ? இப்படி செய்வது தேச நலனை வஞ்சிப்பதாகாதா? என வினவியுள்ள ஸ்டாலின், இவற்றுக்கெல்லாம் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என கூறியுள்ளார்.