மக்களுக்கு உதவ மீண்டும் 'ஒன்றிணைவோம் வா...' - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
கொரோனா முதல் அலையின் போது திமுக செயல்படுத்திய ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் இந்த முறையும் மக்களுக்கு உதவ தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள வேண்டுகோள் மடலில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தாலும், அதனை கொண்டாட முடியாத அளவிற்கு கொரோனா பேரிடரை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் திமுகவின் போர்க்கால நடவடிக்கையால் 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையினர் உதவியுடன் தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவீச்சில் உழைத்து வருவதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உதவிக்கரம் நீட்டுவதில் தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகள் எப்போதுமே முன்கள வீரர்கள்தான் என்றும், திமுக அரசின் நடவடிக்கைகளுடன், கொரோனா முதல் அலையின் போது செயல்பட்டதை போல ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் திமுகவினர் செயல்படுத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்.எல்.ஏக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் களப்பணியாற்றி மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்