சுதந்திரமான வாக்கெடுப்பு அவசியம்: ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
சட்டமன்றத்தில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடைபெற ஆளுநர் வித்யாசாகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுங்கட்சியான அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும், அவர்களை சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள், இப்படி பிணைக் கைதிகள் போல் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது என்றும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தில் நிலையான சுதந்திரமான சட்டப்பூர்வமான வழியிலான ஆட்சியை நிலைநாட்ட வேண்டியது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரின் கடமை என எனக் கூறியுள்ள ஸ்டாலின், அரசியல் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் ஆளுநர் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து, ஜனநாயக மாண்புகளை ஆளுநர் காக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.

